Sep 10, 2012

கோடையில் ஒரு மழை நேரம்..!

இருட்டிய  வானத்தை 
அலட்சியம் செய்து வந்தது
என் தவறுதான்... 

இதமான குளிர் காற்றுடன் 
லேசான தூறல் ஆரம்பமானது... 

பைக்கை ஓரங்கட்டிவிட்டு
பக்கத்தில இருந்த சிறு கடைக்குள்,
நின்றுகொண்டிருந்த இருவருடன் 
மூன்றாமவனாக 
என்னையும்  ஒளித்துக்கொண்டேன்... 

மெதுவாக தூற ஆரம்பித்தது
வானம்..! 

திட்டிக்கொள்ள முடியாத மழை -
சில இனிமையான சந்திப்புக்களுக்கும், 
பல இதமான நினைவுகளுக்கும்
காரணமாக இருந்ததால்..! 

மழையில் நனைந்த பார்வை
அங்கும் இங்கும் சென்று வர, 
நினைவோ 
கல்லூரி காலங்களைஅசைபோட்டன..! 

அதோ தூரத்தில்அந்த உருவம்..! 

தன்  கால் விரல்களை முத்தமிட்டு
பூமியில் விழும் மழைத்துளிகளை ரசித்தபடி
அந்த பேருந்து நிலையத்தில்
அவள் உருவில் ஒரு பெண்.. 

இல்லை இல்லை... 
அது அவளாக கூட இருக்கலாம்.
மறக்க முயன்றும், மறக்க  முடியா உருவம்..! 

என்னை மறந்து என் பார்வை அவள் மேல் நிலை கொண்டது.


ஆம்…. அது அவள்தான், அவளேதான் -
அங்கும் இங்குமாக யாரையோ எதிர்பார்த்தவளாய்..! 

சில வருடம் ஓடிட்டு 
அவளை பார்த்து..
பார்ப்பேனென்று நினைக்கவில்லை, 
இப்போ என் முன்னாள் அவள்..!


அவளுடனான நினைவுகள்
என் முன்னே நனைந்துகொண்டிருந்தது, 
சில வலிகளுடன்..! 

இந்த மழைக்கும் 
என் நினைவுகளுக்கும்
உரித்தான இணைப்பு
அவளுக்கும் தெரியும்..! 

அதோ, அவள் என்னை பார்ப்பது போல் ஒரு பிரமை,
இல்லை, அவள் என்னை கண்டு கொண்டால்.. 
என்னைத்தான் பார்க்கிறாள்.

என்னை கண்டு கொண்டதன் அடையாளமாய், 
உதட்டோரம் அதே சிறு புன்னகை
இல்லை இல்லை,  இது கொஞ்சம் புதிது
எதோ ஒன்றை இழந்ததாய் சொல்கிறது அது..! 

விழிகளால் நலம் விசாரிக்க முயல்கிறாள்,
முடியவில்லை.., 
சிறு சோகம் நிலைகொள்கிறது அவள் விழிகளில்,
அதை மறைக்க முயல்கிறாள்… 

ஒருவேளை அவளும்
என்னை விரும்பியிருப்பாளோ..! 

பேருந்து நிலையத்தில்
திடீரெண்டு தோன்றிய அந்த ஆண் உருவம்
அவள் கையை உரிமையோடு பற்றி
குடைக்குள் அவளை ஒளித்து காருக்குள் ஏற்றுகிறது...


அது அவள் கணவனாக இருக்கலாம்...

அண்மையில் நடந்த 
அவளது திருமண செய்தியை
நம்ப மறுத்த செவிகள் - நம்ப  தொடங்கின... 

மெதுவாக ஆரம்பமாகி
வேகமாகிகொண்டிருந்தது  மழையும்,
அவள் செல்லும் வண்டியும்… 

சட்டென்று நடந்து முடிந்தநிகழ்சிகள் 
கடந்த ஞாபகங்களை 
அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றன,  

மறைத்து வைத்த காதலின்,
முடங்கி போன 
உணர்வுகளுடன்
மழையில் நனைந்தபடி நான்..!


அதோ -
பார்வையை விட்டு மறையும் தூரத்தில்
அவள் வண்டி செல்கிறது...

ஒரு முறையாச்சும் அவள் என்னை திரும்பி பார்த்திருக்க கூடும்...!