Sep 10, 2012

கோடையில் ஒரு மழை நேரம்..!

இருட்டிய  வானத்தை 
அலட்சியம் செய்து வந்தது
என் தவறுதான்... 

இதமான குளிர் காற்றுடன் 
லேசான தூறல் ஆரம்பமானது... 

பைக்கை ஓரங்கட்டிவிட்டு
பக்கத்தில இருந்த சிறு கடைக்குள்,
நின்றுகொண்டிருந்த இருவருடன் 
மூன்றாமவனாக 
என்னையும்  ஒளித்துக்கொண்டேன்... 

மெதுவாக தூற ஆரம்பித்தது
வானம்..! 

திட்டிக்கொள்ள முடியாத மழை -
சில இனிமையான சந்திப்புக்களுக்கும், 
பல இதமான நினைவுகளுக்கும்
காரணமாக இருந்ததால்..! 

மழையில் நனைந்த பார்வை
அங்கும் இங்கும் சென்று வர, 
நினைவோ 
கல்லூரி காலங்களைஅசைபோட்டன..! 

அதோ தூரத்தில்அந்த உருவம்..! 

தன்  கால் விரல்களை முத்தமிட்டு
பூமியில் விழும் மழைத்துளிகளை ரசித்தபடி
அந்த பேருந்து நிலையத்தில்
அவள் உருவில் ஒரு பெண்.. 

இல்லை இல்லை... 
அது அவளாக கூட இருக்கலாம்.
மறக்க முயன்றும், மறக்க  முடியா உருவம்..! 

என்னை மறந்து என் பார்வை அவள் மேல் நிலை கொண்டது.


ஆம்…. அது அவள்தான், அவளேதான் -
அங்கும் இங்குமாக யாரையோ எதிர்பார்த்தவளாய்..! 

சில வருடம் ஓடிட்டு 
அவளை பார்த்து..
பார்ப்பேனென்று நினைக்கவில்லை, 
இப்போ என் முன்னாள் அவள்..!


அவளுடனான நினைவுகள்
என் முன்னே நனைந்துகொண்டிருந்தது, 
சில வலிகளுடன்..! 

இந்த மழைக்கும் 
என் நினைவுகளுக்கும்
உரித்தான இணைப்பு
அவளுக்கும் தெரியும்..! 

அதோ, அவள் என்னை பார்ப்பது போல் ஒரு பிரமை,
இல்லை, அவள் என்னை கண்டு கொண்டால்.. 
என்னைத்தான் பார்க்கிறாள்.

என்னை கண்டு கொண்டதன் அடையாளமாய், 
உதட்டோரம் அதே சிறு புன்னகை
இல்லை இல்லை,  இது கொஞ்சம் புதிது
எதோ ஒன்றை இழந்ததாய் சொல்கிறது அது..! 

விழிகளால் நலம் விசாரிக்க முயல்கிறாள்,
முடியவில்லை.., 
சிறு சோகம் நிலைகொள்கிறது அவள் விழிகளில்,
அதை மறைக்க முயல்கிறாள்… 

ஒருவேளை அவளும்
என்னை விரும்பியிருப்பாளோ..! 

பேருந்து நிலையத்தில்
திடீரெண்டு தோன்றிய அந்த ஆண் உருவம்
அவள் கையை உரிமையோடு பற்றி
குடைக்குள் அவளை ஒளித்து காருக்குள் ஏற்றுகிறது...


அது அவள் கணவனாக இருக்கலாம்...

அண்மையில் நடந்த 
அவளது திருமண செய்தியை
நம்ப மறுத்த செவிகள் - நம்ப  தொடங்கின... 

மெதுவாக ஆரம்பமாகி
வேகமாகிகொண்டிருந்தது  மழையும்,
அவள் செல்லும் வண்டியும்… 

சட்டென்று நடந்து முடிந்தநிகழ்சிகள் 
கடந்த ஞாபகங்களை 
அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றன,  

மறைத்து வைத்த காதலின்,
முடங்கி போன 
உணர்வுகளுடன்
மழையில் நனைந்தபடி நான்..!


அதோ -
பார்வையை விட்டு மறையும் தூரத்தில்
அவள் வண்டி செல்கிறது...

ஒரு முறையாச்சும் அவள் என்னை திரும்பி பார்த்திருக்க கூடும்...!

Jul 28, 2012

***********************

காலமே பதில் சொல்லும்
கண்களற்ற காதலுக்கு..

தலையில் -
எழுத்துப்பிழை இருப்பின்
இறைவனிடமா  
காட்டமுடியும்..?

"நடப்பவை நன்மைக்கே"
நாகரிக சமாதானம்
புத்திக்கு மட்டும்..

உன்னுள் வாழும்
'உனக்கு..?'

வலிகள் தீர 
அழுதுவிடு
மனதுக்குள் - 
மௌனமாக..!

Jul 27, 2012

*****************************

எதேர்ச்சையாகத்தான் 
அறிய நேர்ந்தது 
அந்நியப் பெண்ணுடனான 
அந்தப் பிரபல்யத்தின்
(அசிங்கமான) 
அந்தரங்க உரையாடலினை..

தடுமாற்றத்தின் 
மத்தியில் 
குழம்பிப்போனேன்
ஒரு சில நிமிடம்..

ஒளிந்திருப்பது -  
மனிதனுக்குள் மிருகமா..?
அல்லது 
மிருகத்துக்குள் மனிதனா..?

Jul 25, 2012

***********************

இலக்கணங்கள் அறிவதில்லை
என் கவிதைகள்..

ஒப்புக்கொள்ளவிட்டால் 
அது கவிதைகளாக அல்ல
என் 
கிறுக்கல்களாகவே இருக்கட்டும்..

இலக்கணம் எதற்கு..?

மௌனம்களின் மொழிகளும்,
மழலைகளின் ஒலிகளும் 
ஒரு வகைக் 
கவிதைகள் தானே..!

Jul 23, 2012

முதல் முத்தம்..!


உன் வீட்டுப்
பின்பக்கம்..

வழக்கமாக சந்திக்கும்
ரகசிய இடம்..

நிழல்களுக்குள்
நம்மை ஒடுக்கி..

மௌனம்களுக்குள்
வார்த்தைகளை புதைத்து..

சப்தமின்றி
சலனமின்றி..

ரகசியமாய் உறவாடுகையில்
தயங்கி கேட்டேன்
ஒரு முத்தம்..!


உன் வாப்பவோ,
உன் உம்மாவோ,
உன் ராத்தாவோ,
அல்லது
அக்கம் பக்கத்தாரோ..

யாரேனும்,
எப்போதேனும்
நம்மைக் கடக்கலாம்
அல்லது
கண்டுவிடலாம் 
எனும் பதட்டத்தில்..

கைகள் பிசைந்து
கண்கள் நோட்டமிட்டுக்கொண்டிருந்த  
எதிர்பாரா தருணத்தில்
தந்துவிட்டாய்..

இறுக்கமான,
ஈரமான
அழகிய இதழ் முத்தம்..!


முதல் முத்தம்
என்பதாலும்,
முடிவுக்கு கொண்டுவர இயலாத 
இன்பத்தாலும் 
மிதந்துகொண்டிருந்த 
என்னை..

இழுத்தெடுத்து
நிதானத்துக்கு
கொண்டுவந்து நிறுத்தியது
நீ சிந்திய
அந்த
வெட்கப் புன்னகை..!

இனம்புரியா இன்பம்
இருவருக்குள்ளும் 
உலா வர..

நாணத்தில் நனைந்து
பூமி பார்த்துக்கொண்டிருந்த
உன் முகத்தை
நிமிர்த்தியபோது..

உதடு கடித்தவளாய்,
மெதுவா கேட்டாய்..

" இன்னுமொன்று  தரவா...!! "

Jun 18, 2012




சொல்லிக்கொடு காதலி
உன் பெண்மைக்குள் 
புதைந்திருக்கும்
அத்தனை ரகசியங்களையும்..!

Jan 6, 2012

*****************

உன் நினைவுகள் 
என்னை
பாடாய் படுத்துகின்றன,

எதற்கடி 
காதலை 
தந்துவிட்டு
கல்லாய் மாறிவிட்டாய்...!

Jan 4, 2012

******************

உன் முத்தத்தின் 
ஈரத்தில் 
உயிர்வாழும்
ஒட்டுண்ணிதான் 
என் உதடு...!

Jan 2, 2012

***********************

உன்னைப் 
பின்தொடர்வதாக எண்ணி 
அடிக்கடி திரும்பி பார்கிறாயே..!

உற்றுப் பார் 
அது நானில்லை, 
என்னுருவில் இருக்கும்
உன் நிழல்தான்..!