Jun 20, 2013

உன் காதல்..!


உனக்கு தேர்வு நெருக்கியிருந்த சமயம்தான், நமக்குள் காதலும் பிறந்தது. 
அன்றிலிருந்து நம் கைபேசிகள் கதைக்காமல் இருந்ததில்லை...

அதிக நேரம் பேசி உன் படிப்பை கெடுக்க வேணாம், 
கொஞ்சம் போல பேசுவோம் என்றுதான் ஆரம்பிப்பேன் ஒவ்வொரு முறையும்...

கடைசியில், மணிக்கணக்கில் கதைத்த பிறகு - 
"போதும் கொஞ்சமாச்சும் படி..... 
இப்படியே பேசிட்டிருந்தால், 
தேர்வு எழுதும்போது என்னைத்தான் திட்டுவாய்..." 
என்று சொல்லி வைத்துவிடுவேன்...

ஒரு பத்து நிமிடம் போனதும், 
மீண்டும் என் கைபேசியில் நீ அழைப்பாய்...

"என்ன..?"

"இவளவு நேரமும் படித்துவிட்டேன், கொஞ்ச நேரம் பேசுவோமே...!!" 
கெஞ்சலுடன் கேட்பாய் நீ...

செல்லமாக கூட திட்ட முடியாமல் 
சிரித்தே விடுவேன் நான் - 
வழிந்துகொண்டிருக்கும் உன் காதலை உணர்ந்தவனாய்..!!

Jun 19, 2013

ரோசக்காரி..!


கோபத்தில்
கத்தியே விட்டேன் -
"பேசாதே.... போய்விடு."
என்று...

ஒரு நிமிடம்தான்
என் கோபத்தின் 
மொத்த
ஆயுட்காலமும்...

அடுத்த நொடியிலிருந்து
ஏங்கிக்கொண்டிருக்கின்றேன்
நீ பேசும்
ஒற்றை வார்த்தைக்காய்...

ரோசக்காரி 
நீ -

இன்றுடன் 
ஒரு வாரமாகிறது
என்னுடன் 
நீ பேசி...

"நீ வந்து 
பேசிருக்கலாம்தானே..?"
என்னை பார்த்து
நீயும் கேட்கக்கூடும்..

நியாயமான கேள்விதான்
ஆனாலும், 
என்னை தடுப்பது 
எதுவோ..?

ஆண் என்ற
ஆணவமா..?
அல்லது, 
பிழை என்னில்லில்லை என்கின்ற
பிடிவாதமா..?

எதுவாகவோ இருந்துவிட்டு 
போகட்டும், ஆனாலும்
ஒன்றை மட்டும்
புரிந்துகொள்

"உன்னுடனான என்
காதல் மட்டும்தான் 
நிரந்தரம், -
கோபமில்லை..."   

Jun 18, 2013

காதல்மனைவிக் காதல்..!


அதிகாலை நேரம்
சீக்கிரமே விழித்துக்கொண்டேன்,
அருகில் நீ 
அசந்து தூங்குகிறாய்..!


சற்று நேரம்
பால்கனியில் நின்றுகொண்டிருந்தபடி,
என்னை மறந்து
எதையோ யோசித்துக்கொண்டிருந்தேன் -

கையில் காபியுடன் 
என்னருகில் வந்து
என்னில் சாய்ந்துகொண்டபடி 
"இன்னும் கோபமாபா..?" என
நீ கேட்கும்வரையில்.


நினைவுகள் களைய,
நிதானத்துக்கு வந்தவனாய்
உன் முகம் பார்த்தேன்..!

"இரவு அப்படி பேசினதுக்கு Sorry  என..."
என்கிறாய்,
கொஞ்சலான பார்வையுடன்..!


அடி கள்ளி -
கண் விழித்ததும்
வழக்கம் போல
உன் தலை கோதி, 
கன்னத்தில் முத்தமிட்டேனே
கவனிக்கவில்லையா..??

இல்லை -
நீ கவனித்திருப்பாய்...!


புன்னகைக்கிறேன்

எந்த கவலையும் இல்லா 
குழந்தையாய் மாறி,

இன்னும் இன்னும்
பிடித்துப்போகிறது உன்னை..!


புன்னகைத்தபடியே நெஞ்சோடு 
உன்னை சேர்த்துக்கொள்கிறேன், 

புரிந்து கொண்டவளாய்
என் நெஞ்சுக்குள்ளேயே 
கண் மூடுகிறாய்..!


இரண்டே வயதுதான் ஆகிறது
நம் திருமணதிற்கு,  

இப்போவும் 
ரொம்ப அழகானது
நம் காதல்...!!

Jun 15, 2013

************************

எங்கோ வாசித்த வரிகள் -

"எதிர்பார்ப்பை குறைத்து கொண்டால்,
ஏமாற்றம் ஒன்றும் பெரிதாக தெரிவதில்லை"

ம்ம்ம்... 
எதார்த்தமான உண்மைதான்,

உள்ளம்கள் பீய்க்கப்பட்ட  பின்னே
உணர்ந்துகொள்ளப்படுகின்றன..! 

Jun 12, 2013

************************

உன் இதழோரம்
ஏதோவொன்று கடித்துவிட்ட
தழும்பைக் காட்டி
"வலிக்கிறது" என
சிணுங்குகிறாய்...

நெஞ்சோடு உன்னை
அள்ளி அணைத்தபடி
அங்கும் இங்குமாக தேடுகிறேன் -

கடித்துச் சென்ற 
அச் சிறுஜீவன்
கையில் அகப்படாதா என்று..!