Aug 28, 2013

************************

கடந்த சில வருடங்களாக எனக்கும் என் ஊருக்கும் இடையிலான நெருக்கம் குறைந்துகொண்டுதான் வருகின்றது. கொஞ்ச காலம் கொழும்பில், இப்போ வெளிநாட்டில். என் ஊரில் நிறையப்பேர் என்னை மறந்திருப்பார்கள், எனக்கும் நிறைய முகங்கள் மறந்து விட்டன என்பதும் உண்மைதான். 
படிப்பும் பணமுமாய் அலைந்துதிரியும் வாழ்வில் சிக்குண்டு தன் மண்வாசனை மறந்த மனிதர்களின் பட்டியலில் என்  பெயரும் அச்சடிக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் என்னுள்ளும்.


"சொர்கமே என்றாலும்.... அது நம்மூர போல வருமா...." 
எங்கோ ஒலித்துக்கொண்டிருக்கிறது இளையராஜாவின் பாடல்..!

Aug 27, 2013

************************

பணம் தேடி கடல் கடந்து வெளிநாடு வந்தேன், இருந்ததை இழந்துவிட்டு. திரும்பிப் பார்க்கும் போதுதான் அங்கிருந்து அனுபவிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்பதை உணர முடிகிறது. எல்லாத்தையும் விட்டு விட்டு நம்ம ஊருக்கே சென்று விடு என்று மனசு சொன்னாலும்; பொருளாதார நிலைமையும், என்னில் வந்து ஒட்டிக்கொண்ட சில பொறுப்புக்களும் இங்கேயே இருந்துவிட நிர்ப்பந்திக்கின்றது. 

பெறுமதி என்பது பணம் சார்ந்தது மட்டுமல்ல என்பதை இழந்துவந்த ஒவ்வொன்றும் ஞாபகப்படுத்திகொண்டுதானிருகின்றன..!

Aug 26, 2013

************************

ஐந்து பேர் கொண்ட
அளவான அறை.

புரிந்துணர்வுகளுடன்  பூத்துக் குலுங்கும்
அழகழகான நட்பு.

உன்னுடன் பேசமுடியா துயரத்தில் 
ஓரமாய் நிற்று அழும் என் மனம்.

Aug 22, 2013

அந்த நிலவும், உன் நிழற்படமும்..!


நான் வெளிநாடு வந்த பிறகு
எல்லாப் பௌர்ணமி தினமும்
தொலைபேசியில் என்னை அழைத்து
"வெளியில் சென்று நிலவைப் பார்...
நான் தெரிகின்றேனா..?" 
என்று கேட்பாய்.

வானுயர்ந்த கட்டிடங்களுக்குள் 
மறைந்துகொண்ட நிலவினைக் காணாது  
பொய்யாய் 
"ஆம்" என்று சொல்வேன் நான்,
என் மடிக்கணனித் திரையில்
உன் புகைப்படத்தைப் பார்த்தபடி.

பூரித்துப்போன நீ
தொலைபேசியில் எனக்கு
முத்தமழை பொழிவாய்;

உன் எச்சில் படா 
முத்தச் சத்தம்
என்னை வந்தடையும் போது -

நமக்குள் மறைத்துவைக்கும்
நம் கண்ணீர்த் துளிகளும் 
என்னைச் சுடும்..!

எங்கோ ஒளிந்துகொண்ட நிலவும்
எழுந்து வந்து 
என்னோடு சேர்ந்து அழும்..!!

Aug 20, 2013

அவளால் காதல் செய்வேன்...!


சற்று முன்பிருந்து 
அவள் ஞாபகங்கள்.  

மனதின் ஆழத்திலிருந்து புறப்படுகின்றன 
அவள் பற்றிய சில நினைவுகள்.

நினைவுகளில் அவள் முகம் மிதந்துவருகையில்
குளித்துக்கொள்கின்றன  என்னிரு விழிகள்.

அகிலமுறங்கிய  இரவினில், 
அறையின் ஓர் ஓரத்தில் கிடத்தப்பட்டிருக்கும் 
என் தனிமைப் படுக்கையில்
அடிக்கடி வந்து செல்வதுதான் -  
அவளுடனான இந்நினைவுகளும், 
அவளுக்கேயான என் விழிச் சாரல்களும்..!


அவள் நினைவுகளையும், 
நினைவுகளில் அவளையும் 
விடுவதாய் இல்லை..!

உறங்கிக்கொண்டிருந்த 
என் மடிக்கணனியை
அவசர அவசரமாய்
எழுப்பிவிடுகின்றேன்.

இணையத்தை இணைத்துக்கொண்டு
எனக்கும் அவளுக்குமேயான  மின்னஞ்சலின்   
இரகசிய இலக்கத்தை
தட்டிவிடுகின்றேன்.

திறந்துகொள்கிறது
என் காதல் டயரி.

அனைத்தும் 
அவளிடமிருந்து.

நிறைய நிறைய 
காதலுடன், எனக்காக..!  



அவள் கொஞ்சல்களையும், கெஞ்சல்களையும்
மின்னஞ்சல் வார்த்தைகளாய் வாசித்துக்கொள்கின்றேன்.

என்னைக் கண்ட ஒவ்வொரு வார்த்தைகளும்
உயிர்பெற்றுத் துள்ளிக்கொண்டெழுவதைக் காண்கின்றேன்.   

நான் கேட்டும், கேட்காமலும் அனுப்பிய 
அவள் புகைப்படங்களை
ஆசை ஆசையாய்த் தேடுகின்றேன்.

ஒவ்வொன்றிலும்  
அழகழகாய் 
அவள்...!


அவள் புருவம்
அவள் விழிகள் 
அவள் நெற்றி
அவள் கன்னம்
அவள் உதடு 
அவள் நிறம்.. 

எல்லாமே 
இன்னும் என்னை 
காதல் செய்கின்றன.

பிறந்த குழந்தையை
முதல் முதலில் பார்த்து ரசிக்கும் தாய் போல் -
அவள் புகைப்படத்தை திரையிட்டு 
அதன் முன்னாலிருந்து ரசிக்கும் - நான்.

அவளை ரசிக்கின்றேனா 
இல்லை, 
நினைவுகளைத் திரட்டி
அவள் நிழற்படத்தை     
உயிர்ப்பிக்கின்றேனா...!


வலிகளையும் தாண்டிய ஏதோவொரு இன்பம்
எனக்குள் எங்கோ 
சுரந்துகொண்டிருக்கின்றது.

நெஞ்சுக் கூட்டுக்குள் இருக்குமென் இதயம்
இடம், வலமாய் 
மாறி மாறித் துடிக்கின்றது.

கன்னம்தாண்டி வடியும் கண்ணீரை 
கண்டுகொள்ளாதிருக்கின்றன
என் விரல்கள்.

அவள் புகைப்படதிற்கு 
உயிர்கொடுத்துக் காதல் சிந்துகின்ற
என் இதழ்கள்.

இந்த இரவுகளில் 
என்னில் இம்மாற்றம்களை 
இயல்பாக்கிவிடுகின்ற 
அவள் தந்த இக்காதல்..!


பத்திரமாய் வைத்திருக்கிறேன் -
நினைவுகளை உயிர்ப்பிக்கும் 
அவள் வார்த்தைகளையும்,
நிரந்தரக் காதல் செய்யும்
அவள் நிழற்படங்களையும்..!

நான் இருக்கும்வரையில்
அவள் நினைவுகள் 
என்னில் உயிர்வாழும்,

நான் இறந்த பின்னர் 
என் கல்லறையும்  
அவள் கவி பாடும்..!

இது -
பிரிந்த காதல்தான்;
செத்துவிடவில்லை..!


என்றும் நான் -
அவளால்
அவளைக் காதல் செய்வேன்...!!

Aug 17, 2013

************************

எப்போவோ
மனிதனிடமிருந்து
கருணையை 
கற்றுக்கொண்டுவிட்டன 
மிருகங்கள்.

இன்று -
இருந்த குணத்தை 
மறந்துவிட்ட 
மனிதன், 
வியந்து பார்கிறான் -

மிருகங்களின்

இரக்க குணத்தை..!!

Aug 16, 2013

************************

ஒரு சில
மிருகமாய்ப்
பிறந்திருக்கலாம்..!


அற்பத்தனமான
அரசியல் இலாபங்களுக்காய் 
தன சகோதரன் உயிரை
தானே கொன்று புசித்து,
இரத்தச் சாறு அருந்தும்
இழிவான மானிடனாய்  
இருப்பைதைக் காட்டிலும் -

வன்முறை அறியா 
வாழ்க்கை செய்யும் 
ஒரு சில மிருகமாய்ப்
பிறந்திருக்கலாம் ..!


கருணையற்றவர்களால் 
காயப்பட்டு, 
களத்தில்
கதறியழுதவர்களிடம்  
கேளுங்கள் - இந்த
மாண்புமிகு 
மானிடனைப் பற்றி;

கீழ் சாதி 
இந்த  
மனித ஜாதி 
என்பார்...!!

Aug 14, 2013

நினைவுகளை எடுத்துச் சென்றுவிடு..!


போதும் 
உன்  நினைவுகள்,
திரும்பி வந்து
எடுத்துச் சென்றுவிடு..!


விலகிப்போனபின் 
உன் நினைவுகளை மட்டும் 
என்னில் ஏன் 
விட்டுச் சென்றாய்..!

திரும்பி வந்து 
எடுத்துச் சென்றுவிடு..!


அழகான நம் காதலின்
அத்தனை சுவடுகளும்
அன்றாடம் நான் கடக்கும்
அனைத்து இடங்களில் ; 

காணும்போதெல்லாம்
கானல் நீராய் முன் தோன்றி -
அங்கும் இங்குமாய்
என்னை அலைக்கழிக்கும் 
உன்னுருவ நினைவுகள் 
எனக்கெதற்கு..!

திரும்பி வந்து
எடுத்துச் சென்றுவிடு..!


காதல் அரும்பிய
ஆரம்பக் காலங்களும்,  
கைகோர்த்துக் கதைபேசிய 
கடற்கரை மணல்களும்;

காவியக் கொலைகாரனாய் 
என்னைப் பார்க்கையில் -
உன்னைப்போல் 
எனக்காய் வாதாட இயலா 
இந்நினைவுகள்
இனியெதற்கு...!  

திரும்பி வந்து 
எடுத்துச் சென்றுவிடு..!


நிம்மதி என்பது
உன்னருக்கில் 
உணர்ந்ததுதான் 

நீ பிரிந்தபின், 
நிம்மதி தொலைத்தபின் 
உன் நினைவுகள் மட்டும்
இங்கெதற்கு..!

நிச்சயம் -
திரும்பி வந்து 
எடுத்துச் சென்றுவிடு..!



நிஜமற்ற உன்
நினைவுகள் வேண்டாம், 
நிலையாய்  என்றும்
நீயேதான் வேண்டும்.

உன் நினைவுகளை 
எடுத்துக்கொள்ளவாவது,
ஒருமுறை இங்கு
திரும்பி வந்துவிடு.

திரும்பி வந்து -
என்னையும் சேர்த்து
நீயே
எடுத்துச் சென்றுவிடு...!!   

Aug 13, 2013

************************

இன்றும் 
அதே கனவு..!

மாலை நேரக் 
கடற்கரையில் - 
என்னைத்
தொட்டுத் தொட்டுப் பேசி
காதல் செய்கிறாய்
நீ..!!

Aug 7, 2013

************************

அய்யோ..!

அவளிடம்
மட்டுமே
நிரம்பி வழிகிறது -
அத்தனை அழகும்...!!