Jul 31, 2013

************************

வழக்கம் போல்
என் திட்டுக்களை
சொந்த்தமாகிக் கொள்கிறது
நம் காதல்..!

பிறகென்ன -
இந்த ராட்சச அழகிக்கு
என் குட்டி இதயம் செய்யும் காதல் 
போதுமா என்ன..!!

Jul 30, 2013

அழகின் பேரழகி..!

அழகுதான் பெண்ணே
உன் ஒவ்வொரு அசைவுகளும்..!

ரசித்துக்கொண்டே கழிக்கின்றேன் 
என் ஒவ்வொரு பொழுதுகளையும்..!

அள்ளிக்கொள்ளதான் தெரியும்
உன் 
அத்தனை அழகையெல்லாம்;

அன்றி -
வர்ணிக்கத் தெரியா
வார்த்தைப் பிச்சைக்காரன்தான் நான்...!

நல்ல வேளை 
கம்பன் மரித்தான்;

இல்லையேல்
உன்னைப் பாட 
கையேந்திருப்பான் - அந்த
வார்த்தைக் கடவுளிடம்..!

என் மௌன பாஷைகள் 
உனக்குப் புரியும் - ஆதலால்  
மௌன  மொழிகளில் இங்கு
நான்தான் உனக்குக் கம்பன்..!

கர்வம் கொள் பெண்ணே 
என்றும் -
அழகின் பேரழகி 
நீயேதான்;

எனக்கும், 
எல்லோர்க்கும்...!!

Jul 22, 2013

************************

யாரிடமாவது 
சொல்லிக்கொள்ள வேண்டும் 
என் மனக் 
குமுறல்களை..!


இதுவரை 
அந்த யாராக 
நீ இருந்தாய்

இனிமேல் 
அந்த நீயாக  
உன் நினைவுகளிருக்கும்..!!

Jul 20, 2013

************************

தோல்விகளின் போது
சொல்லிக்கொள்ளும்
ஆறுதல் வார்த்தையினையே
அதிகம் புலம்பிக்கொண்டிருக்கிறேன் - நான்.

"இதுவும் கடந்து போகும்"

Jul 19, 2013

************************

அதிகம் நேசித்தது
உன்னைத்தான்..

அதிகம் ஆசைவைத்தது
உன்னில்தான்..

அதிகம் வலி கண்டதும்
உன்னால்தான்..!

இன்னும் -
பிறந்த குழந்தைபோல்
புதிதாகவே இருக்கிறது
என் காதல்..

உன் காதல் மட்டும் -
வேக வேகமாய் வளர்ந்தது
மூப்படைந்து மரித்து 
மறைந்துவிட்டதுவோ...??

Jul 18, 2013

கொடூர மௌனம்..!


இன்னும்
எத்தனை நாட்கள்தான் 
இப்படிப் பேசாதிருந்து
என்னைக் கொல்லப்போகிறாய்..!

சண்டைகள் நமக்குள்
சாதாரணம்தான்
இருந்தும் - நீ 
பேசாது மௌனித்திருப்பது
என் மரணத்தின்
உச்சமே..!

கோபங்கொண்டு ஏசிவிட்ட
உதடுகளுக்குத் தெரிவதில்லை
மனதின் வலியும், 
கண்ணீரின் கனமும்..!

இன்று -

என் 
சுவாசத்தில்
சில தடங்கல்கள்..

என் 
நுகர்வுக்கலத்தில்
மரணத்தின் வாசனைகள்..

என்னுயிர்
பீய்த்தெடுக்கப்படுவதுபோல் 
ரண உணர்வுகள்..

வலிகள் -
இங்கு
எல்லாமே 
வலிகள்..

இவையெல்லாம் -


உன் பிரிவு
நிரந்தரம் என்பதை
எனக்குச் சொல்லும்
ஏற்பாடுகளா..??

இனியும்
கண நாள் தாங்காது
இந்த
காதல் ஜடம்;

என்னவளே -

என் 
மரணத்திற்கு முன்னராவது
உன்
மௌனம் களைப்பாயா...!! 

Jul 17, 2013

நம் காதல் செடி..!


அறிந்துகொள்
என் காதலி...!

பக்கமாய் இருந்தாலும்,
தூரமாய் சென்றாலும்;
நீ வைத்த காதல் செடி 
என்னுள்ளே -
வளர்ந்துகொண்டேதான் 
இருக்கின்றது...!

பிரிவு நோய் கொண்டு
பட்டுவிடக்கூடுமோ 
இச்செடி யென
பயந்ததில்லை நான்..

காரணம் - 

கண்கள் பார்த்து வளர்ந்த 
காதல்ச்செடி இது ;

நம் நினைவுகள் 
போதுமே 
என்றும்
உயிர்த்து நிற்க...!!

Jul 16, 2013

************************

நிஜமெது, 
நிழல்லெதுவென
பிரித்தறியும் நிதானமின்றி
காதல் போதையில் தள்ளாடும் 
காதல்காரன்தான் -
நான்...

இருந்தும்;
என் எல்லா நிலைகளிலும்
உறுதியாய் 
உளறிக்கொள்கின்றேன்
இவ்வுண்மைகளை -

"இன்று நீ இல்லை
என்பது நிஜம்...

என்னில் நீ உள்ளாய்
என்பதும் நிஜம்...!!"

Jul 15, 2013

உயிர்கொள்ளும் உன் வார்த்தைகள்..!


உன் 
ஒவ்வொரு வார்த்தைகளும்
பத்திரப்படுத்தப்பட்டிருக்கின்றன 
என்னில்..!

மீண்டும் மீண்டும்
வாசித்துக்கொள்கிறேன் நான் -
நம் நினைவுகளில் 
வசித்தபடி..!

உச்சரிப்பின்  ஓசை கேட்டு,
காதலுக்குள் கரைந்துபோன
நம் விம்பம்கள் 
உயிர்கொண்டேழுகின்றன...!


நம்
காதல் காட்சிகள் ஒவ்வொன்றும்
என் 
கண் முன்னே..

ஏனோ -
கதவுகளை 
அடைத்துக்கொள்கின்றன
என்னிரு கண்கள்...!


"இக்கனவுலகம் வேணாம்; 
உன் கண்கள் பார்த்து
காதல் வார்த்த 
என்
அவ்வுலகமே வேணும்..!"

அடம்பிடிக்கும் இதயம்,
இனிமேல் 
அர்த்தமில்லா துடிப்பென
அடங்கிவிடுமோ...!!


துடிதுடிக்கும் 
என்னிதயமே
இதையும் 
தெரிந்துகொள் -

நீ அடங்கினாலும் 
அருந்துவேன் 
என்னவள் ஊட்டிய இக் 
காதல் மதுவை...!!

Jul 14, 2013

கடவுளின் எழுத்து..!


புதுமையான நாடகம்தான்
இந்தக் காதல்...


அவன் - கதாநாயகனாகவும்,
அவள் - கதாநாயகியாகவும்

புதியதொரு உலகில் - பல
கற்பனைக் கதாபாத்திரங்களுடன்
காலத்தினால் அரங்கேற்றப்படும்
அநியாயமான நாடகமே -
இந்த காதல்..!


இணைவுகள்
அல்லது
பிரிவுகள்.

கால காலமாக 
இவைகள்தான்
இதன் -
இறுதி முடிவுகள்..!


இணைவோ / பிரிவோ
இரண்டிலுமே இன்பம் -

பிதற்றிகொள்ளும்
கற்பனை காவியர்கள்..!


அவனோ / அவளோ

தனக்கு கிடைப்பானா  / கிடைப்பாளா
எனும் ஏக்கத்திலும்,
இன்னும்பல எதிர்பார்ப்புக்களிலுமே
கழிகிறது - நாடகத்தின்
கணநேர காட்சிகள்..!


தான் தேர்ந்தெடுத்த 
அவனுடனோ / அவளுடனோ
வாழ்வை அமைத்துக்கொள்ள துடிக்கும்
பல சுவாரசியம்களினால் 
அலுப்பின்றி பயணித்தாலும் -

திருமணம் என்னும் 
கடைசிப் பாகத்தில்
வந்தடைகிறது
இதன் முடிவுகள்..!


கால காலமாக தொடரும்
அதே முடிவுகள்..!

இணைந்தவர் 
நிஜவுலகில் இனிக்கிறார், 

பிரிந்தவர்
நினைவுலகில் மிதக்கிறார்..!


"அநியாய நாடகமா..?
காதலையா கொச்சைப்படுத்துகிறாய்...?
இவன் ஒரு காதல் துரோகி" யென
பொங்கியெழும் கதாநாயகர்களே / நாயகிகளே 

கொஞ்சம் பொறும் -
என் காரணத்தையும் கேளும்.


நானும் ஒரு கதாநாயகனே..!!


கடவுளின் ஏட்டில்
காதலனுக்கு காதலி, 
காதலிக்கு காதலன்
ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டனராமே..!


திரையிடப்பட்ட இவ்வுண்மையை
அறியா நாம் -
மனங்களை மாற்றிக்கொண்டிணைய  
முயல்கிறோமே...!


நியாயமானதாக வேஷமிடப்பட்ட
அநியாயமில்லையா இது..??


கற்பனைகள் தவறில்லை, 
கனவுகளும் தவறில்லை.
இவை -
இருவருக்கும் 
இருந்தால் மட்டும் போதுமா..!

கடவுளின் ஏட்டிலும் 
எழுதபட்டிருக்க வேணுமே..!!